நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மோதலைத் தடுக்கச் சென்ற ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கல்லூரிகள், பள்ளிகள் என்று ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனாலேயே அப்பகுதிக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்ற அடைமொழியும் கூட இருக்கிறது. இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடையே இன்று ஏற்பட்ட தகராறில் சக மாணவரை மற்றொரு மாணவர் அறிவாளால் வெட்டியதில் அவருக்கு தலை கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதை தடுக்க முயன்ற ஆசிரியை ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியை ஆகிய இருவரும் உடனே மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீஸார் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.