பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் எடுத்த அதிரடியானது பாமக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கட்சியின் பொருளாளர் திலகபாமா, ‘பாமக ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின் இந்த முடிவு தவறு’ என முகநூலில் பகிரங்கமாக வெடித்தார். அவருக்கு கடுமையாக ரியாக் ஷன் காட்டிய பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ‘நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி மருத்துவர் ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது’ என்று அனல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதனிடையே, ‘பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட என்னை ஒற்றை அறிக்கையின் மூலம் நீக்கிவிட முடியாது. நானே பாமக தலைவராக தொடர்கிறேன். 2026-ல் பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும்’ என அன்புமணியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பாமக-வினரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பாமக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “2022 மே மாதம் அன்புமணியை கட்சித் தலைவராக்கிய அய்யா ராமதாஸ், மகனிடம் நிறையவே எதிர்பார்த்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அன்புமணியால் கட்சியை கொண்டு செலுத்த முடியவில்லை. இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாமக தோல்வி முகம் கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி என்ற அய்யாவின் முடிவுக்கு மாறாக அன்புமணி பாஜக உடன் கூட்டணி அமைத்ததும் சரிவுக்கு முக்கிய காரணம்.
அதன்பிறகு, அறிக்கைகள் மூலமாகவே அரசியல் நடத்தி வரும் அய்யா, கட்சிக்குள் நடப்பதை அறிந்து கொள்ளவே பேரன் முகுந்தனை பாமக இளைஞர் சங்க தலைவராக அறிவித்தார். ஆனால், அதை அன்புமணி பகிரங்கமாக எதிர்த்தார். அன்புமணியின் இரண்டாவது மகள் சம்யுக்தாவின் கணவர் டாக்டர் பிரதீவனை இளைஞர் சங்க பதவிக்கு கொண்டுவர நினைத்தார் அன்புமணி.
அதற்கு மாறாக, பிரதீவனின் தம்பி முகுந்தனை நியமித்தது அவருக்குப் பிடிக்கவில்லை. மருமகன் பிரதீவனுக்கு இல்லாவிடாலும் தனது இளைய மகள் சஞ்சுத்ராவை அந்தப் பதவியில் அமர்த்தலாம் என்பதும் அன்புமணியின் இன்னொரு பிளான். ஆனால், அதையும் அய்யா அவ்வளவாய் விரும்பவில்லை.
அய்யாவை பொறுத்தவரை வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். கூட்டணிக்கு அழைக்கும் கட்சியிடம், இது தொடர்பாக தெளிவான உத்தரவாதத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் அவர் முனைப்புடன் இருக்கிறார். ஆனால் அன்புமணி, பாஜக கூட்டணிக்கே ஆர்வமாய் இருக்கிறார். இதில் அவரது சுயநலமும் இருக்கிறது.
ஆனால் அய்யா, திமுக-வுடன் பேசிப்பார்த்தால் என்ன என்று நினைக்கிறார். அதனால் தான், அண்மைக்காலமாக திமுக ஆட்சிக்கு எதிராக கடுமையான அறிக்கைகளை குறைத்துக் கொண்டு ‘அட்வைஸ்’ அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார். ஆக, கூட்டணி விஷயத்தில் முடிவு தனதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரத்தை அய்யா தனது கையில் எடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.
இன்னும் சிலரோ, “தெரிந்தோ தெரியாமலோ பாஜக வட்டாரத்தில் அன்புமணி நெருக்கமாகிவிட்டார். இந்த நிலையில் அவராக அங்கிருந்து பிரிந்து வந்தால் அது அவருக்கு சிக்கலை உண்டாக்கும். அதனால், அப்பாவும் பிள்ளையும் பேசிவைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பது போல் தான் தெரிகிறது” என்கிறார்கள்.
ஆக ராமதாஸ், அதிகாரத்தைப் பறிப்பது போல் பறித்து மகனை இக்கட்டில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லும் பாமக-வினர், “இரண்டு தரப்பிலும் மாறி மாறி சமரசப் பேச்சுவார்த்தை நடப்பதால் கூடிய சீக்கிரமே, ‘அன்புமணியே தலைவராக தொடர்வார்’ என அய்யாவிடமிருந்து எந்த நேரத்திலும் இன்னொரு அறிக்கை வரலாம்” என்கிறார்கள்.