சென்னை: “பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித் ஷா கூறவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு ஏன் என்று விளக்கிப் பேசினார். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேளிகளும் கேட்கப்பட்டது. அதில் கூட்டணி தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக – அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். மீண்டும் அவர் தெளிவுபட டெல்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என்று கூறினார். கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்களாகவே ஏதாவது பொருள் தேடாதீர்கள்” என்று கூறினார்.
அமித் ஷா பேசியது என்ன? – கடந்த 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறும்போது, “பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம். வரும் தேர்தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும் போட்டியிட இருக்கிறோம்.
வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்துதான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி இருக்கும்.
அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு ஒருபோதும் இருக்காது. கூட்டணியில் இணைவதன் மூலம் இருதரப்புக்குமே பலனிருக்கிறது. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்சியில் எத்தகைய பங்கு என்பதும் பின்னர்தான் பேசப்படும்” என்று அமித் ஷா பேசியிருந்தார்.
கூட்டணி மட்டும்தான்; கூட்டணி ஆட்சியில்லை… இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “கூட்டணி என்று அமித் ஷா சொல்லவே இல்லை. நீங்கள் ஏதேதோ வித்தை காட்டுகிறீர்கள். பாஜக – அதிமுக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றார். நீங்களாகவே ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி விறுவிறுப்பான செய்தியைத் தேடுகிறீர்கள். உங்கள் விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளதாகவே இவ்வாறு குழப்பம் ஏற்பட்டுள்ளது கவனம் பெறுகிறது. மேலும் வரும் 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டமும் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.