சண்டிகர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 16 ரன்களில் வீழ்த்தி அசத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டிஃபென்ட் செய்யப்பட்ட குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியை 15.3 ஓவர்களில் ஆல் அவுட் செய்தது கொல்கத்தா. வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் அந்த அணிக்காக விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா அணி விரட்டியது. டிகாக் மற்றும் சுனில் நரேன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். நரேன் 5 ரன்களிலும், டிகாக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கொல்கத்தா கேப்டன் ரஹானே மற்றும் அங்ரிஷ் ரகுவன்ஷி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆட்டம் மாறிய தருணம் – 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. எப்படியும் இலக்கை சுலபமாக எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ரஹானே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் பஞ்சாப் வீரர் சஹல். இரண்டாவது இன்னிங்ஸின் 8-வது ஓவரில் ரஹானே விக்கெட் விழுந்தது. தொடர்ந்து சஹல் வீசிய 10-வது ஓவரில் ரகுவன்ஷியை அவுட் செய்தார் சஹால். அவர் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் வீசிய 11-வது ஓவரில் வெங்கடேஷ் ஐயரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். தொடர்ந்து 12-வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப்பை சஹல் அவுட் செய்தார்.
சஹல் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய கடைசி ஓவரில் ரஸ்ஸல் 16 ரன்கள் விளாசினார். இருப்பினும் அடுத்த சில ஓவர்களில் கொல்கத்தா அணி ஆல் அவுட் ஆனது. 15 ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார் அர்ஷ்தீப். முதல் பந்தில் ரஸ்ஸலை போல்ட் செய்தார் மார்க்கோ யான்சன். அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா. இதன் மூலம் 16 ரன்களில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சஹல் வென்றார்.