புதுடெல்லி: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
கர்நாடகா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை (40). தனது பணியில் ‘கர்நாடகா சிங்கம்’ என பெயரும் பெற்றிருந்தார். கடந்த 2017-ல் திடீரென பாஜகவில் இணைந்தவருக்கு எவரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது முதல் தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி கூடத் தொடங்கியதாக கருதப்பட்டது. பாஜகவுக்கு இளம் தலைமுறையினர் ஆதரவு பெருகுவதாக கருதப்பட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவுடன் அமைந்த கூட்டணியின் தாக்கமாக அண்ணாமலை அவரது தலைவர் பதவியை இழந்தார். புதிய தலைவராக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அமர்த்தப்பட்டார். அண்ணாமலை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக்கப்பட்டார்.
அவருக்கு கட்சியில் தேசிய பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் பிஜேஒய்எம் தேசிய தலைவராக அண்ணாமலை அமர்த்தப்படுவார் என டெல்லியில் தகவல் பரவ தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாஜக தேசிய தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, “தமிழக மக்களுக்கு அண்ணாமலையிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தலைவர் பதவியிலிருந்து அவர் இறக்கப்பட்டார்.
எனினும், அவரை கட்சித் தலைமை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் தவிர வேறு எந்த கட்சியிலும் தேசிய தலைவர்கள் இல்லை. இவர்களுக்கும் தற்போது மதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர்களில் சிலரை தேசிய தலைவர்களாக்க எங்கள் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு அண்ணாமலைக்கு பொருத்தமாக இளைஞர் அணி தலைவர் பதவி இருக்கும்” என்று தெரிவித்தனர்.
மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் 2019-ல் வெறும் 3 சதவீதமாக இருந்த வாக்குகள் 11 சதவீதமாக உயர்ந்ததாக ஒரு கருத்து உள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என தலைமையிடம் அண்ணாமலை வலியுறுத்தினார்.
ஆனால் இன்னும் சுமார் 15 வருடங்களுக்கு கட்சியால் அங்கு தனித்து போட்டியிட முடியாது என அவரது கோரிக்கையை தலைமை நிராகரித்தது. இந்நிலையில் இளைஞர் பிரிவின் தேசிய தலைமை பதவிக்கு அண்ணாமலை பொருத்தமானவர் என பாஜக தலைமை கருதுகிறது. இதற்கான அறிவிப்பு அண்ணாமலை தனது புனித யாத்திரையை முடித்து தமிழகம் திரும்புவதற்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.
தற்போது பிஜேஒய்எம் தலைவராக கர்நாடாக எம்.பி. தேஜஸ்வி சூர்யா இருந்து வருகிறார். அதிரடி அரசியலுக்கு பெயர்போன சூர்யாவுக்கு முன்பாக அப்பதவியில் இமாச்சலின் அனுராக் தாக்கூர் இருந்தார்.