நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தடுக்கப் போன ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது, இப்பிரச்சினையின் தீவிரத்தை நாம் அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏதுமறியாத பதின்பருவ வயதிலுள்ள மாணவரை இன்னும் குழந்தைப் பருவத்தை தாண்டாத சிறுபிள்ளையாகவே சட்டம் கருதுகிறது. இந்தப் பருவத்தில் செய்யும் எந்த தவறுக்கும் அவர்களை நேரடிப் பொறுப்பாளியாக்க முடியாது. மாறாக அந்த மாணவரைச் சுற்றியுள்ள சூழ்நிலை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சக மாணவர்களின் அணுகுமுறையையே குற்றத்திற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.
படிக்கும் காலகட்டத்தில் மாணவர்களுக்குள் நட்பு ரீதியாக சில சண்டை சச்சரவுகள் இருப்பது சகஜம். ஆனால், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வகுப்பறைக்கு எடுத்துச் சென்று கோபத்தை வெளிப்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது அவசியம்.
மாணவப் பருவத்தில் உள்ள பிள்ளைகளிடம் பெற்றோர் தங்கள் சாதிப் பெருமைகளைப் பேசுவது, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதத்தை பிஞ்சு நெஞ்சங்களில் விதைப்பது போன்ற செயல்கள், நல்லது கெட்டதை பகுத்தறிய முடியாத வயதில் உள்ள மாணவர்களின் உள்ளத்தை மாசுபடுத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை கையில் எடுக்கத் தூண்டுகிறது.
மாணவர் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் சாதி, மத, இன துவேஷங்களை போதிக்காமல் சமத்துவத்தை வளர்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் தற்போது அதிகரித்துள்ளதையே நடைபெறும் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதேபோல, அலைபேசியின் தாக்கத்தால் பெற்றோர், ஆசிரியர்களை கவனிக்கும் நேரத்தை விட காணொலிகளில் மாணவர்கள் செலவழிக்கும் நேரம் அதிகமாகிவிட்டது. திரையில் வெற்றிப்படங்களாக வலம் வருபவை பல வன்முறை காட்சிகளை அளவுக்கு அதிகமாக திரும்பத் திரும்ப காண்பித்து, வன்முறை தவறல்ல என்பது போன்ற தோற்றத்தை இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கின்றன.
கொடூரமான வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாச வசனங்களை குழந்தைகளின் பார்வையில் இருந்து ஒதுக்கிவைக்கும் பழக்கம் அனைவருக்கும் மறந்தேவிட்டது என்று சொல்லுமளவுக்கு இத்தகைய காட்சிகள் தற்போது அவர்களிடம் தங்கு தடையின்றி சென்றடைகின்றன. வாசிப்பு மூலம் செய்தி மற்றும் நல்ல கருத்துகளை அறிந்து கொண்ட காலம் மாறி, காணொலி மற்றும் ஊடகங்கள் மூலம் வன்முறை காட்சிகள் இளைஞர்களிடம் அதிக அளவில் சென்றடைகின்றன.
இதுபோன்ற காட்சிகளை படைப்பவர்கள் எந்த அளவு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டுமோ, அதே அளவு அந்தக் காட்சிகளை இளைஞர்களின் பார்வையில் இருந்து ஒதுக்கி வைக்கும் கடமையையும் பெற்றோரும் ஆசிரியர்களும் முடிந்த அளவுக்கு செய்வதன் மூலமே வன்முறை பாதையில் இருந்து இளைய சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.