ஹிசார்: முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அம்பேத்கரின் பிறந்த நாளில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது:
பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். நம்முடைய அரசியல் சாசனமும் இதற்கு தடை விதித்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. இதற்காக, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளன.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஒருசில அடிப்படைவாதிகளை மட்டுமே திருப்திபடுத்தும் வகையில் கொள்கைகளை வகுத்தது. அதேநேரம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கு போதிய கல்வி அறிவு கிடைக்க நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் ஏழைகளாக இருந்தனர்.
இதற்கு மிகப்பெரிய ஆதாரம் என்னவென்றால், கடந்த 2014 மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, 2013-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த வக்பு சட்டத்தை அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக திருத்தியது. வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தை மீறும் செயல் ஆகும். இது அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அவமானம் ஆகும்.
முஸ்லிம்களின் நலன்களின் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. அப்படியென்றால் அந்த கட்சியின் தலைவராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை.
மேலும் முஸ்லிம்கள் மேல் அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் (காங்கிரஸ்) அதைச் செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து எதையும் கொடுக்க மாட்டார்கள். ஆனால், பொதுமக்களின் உரிமைகளை பறிப்பார்கள்.
நாடு முழுவதும் வக்பு வாரியங்களிடம் பல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை நேர்மையாக பயன்படுத்தியிருந்தால் ஏழை முஸ்லிம்கள், பஸ்மந்தா முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன் அடைந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதனால் முஸ்லிம் இளைஞர்கள் சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் வகையில்தான், மத்திய அரசு வக்பு திருத்த சட்டத்தை இயற்றி அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய சட்டத்தால், வக்பு வாரியங்களால் இனி எந்த ஒரு ஆதிவாசியின் நிலத்தையும் அபகரிக்க முடியாது. அத்துடன் ஏழைகள், பஸ்மந்தா முஸ்லிம்கள், கணவரை இழந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு உரிய உரிமைகள் கிடைக்கும். இதுதான் உண்மையான சமூக நீதி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.