அரூர்: அரூர் பகுதியில் விலைவீழ்ச்சியால் தர்பூசணி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நரிப்பள்ளி, சிக்கலூர், கோட்டப்பட்டி, பையர்நாய்க்கன்பட்டி, புது கொக்கராப்பட்டி, மாலகாபாடி, வாச்சாத்தி, தாதம்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, முத்தனுார், கம்பைநல்லூர், மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் தர்பூசணி (பச்சை மற்றும் கிரண்) பழச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
வழக்கமாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜுன் மாத சீசனுக்காக 350 ஏக்கருக்கும் அதிகமாக தர்பூசணி பயிரிடப்படும். இதில் போதிய வருவாய் கிடைப்பதால் ஆண்டு முழுவதும் சிலப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சேலம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், உள்ளூர் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுகிறது.
வழக்கமாக கோடை சீசனில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகும். ஆனால், நடப்பாண்டு தர்பூசணியில் ஊசி மூலம் நிறமேற்றப்படுவதாக சமீபத்தில் பரவிய தகவல்களால் தர்பூசணி விற்பனை சரிந்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களிலும், உள்ளூரிலும் தர்பூசணி நுகர்வு பாதியாக குறைந்து விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தர்பூசணி விவசாயி கணேசன் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து தர்பூசணி பயிர் செய்யப்படுகிறது. மற்ற விளைப்பொருட்கள் போல் இதற்கு சரியான விற்பனையாளர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும் இடைத்தரகர்கள் மூலமே விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் குறைந்த விலை பேசி வாங்கும் இடைத்தரகர்கள் மொத்த வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்று விடுகின்றனர்.
கடந்த கோடையின் போது விவசாயிகளிடம் தர்பூசணி கிலோ ரூ.10-க்கு வாங்கிய இடைத்தரகர்கள் அதனை கிலோ ரூ.20-க்கு விற்று லாபம் பார்த்தனர். தற்போது தர்பூசணியில் ஊசி மூலம் நிறம் ஏற்றப்பட்டு விற்பதாக பரவிய தவறான தகவலால் விற்பனையில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வியாபாரிகள் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே வாங்குகின்றனர். அதிலும் பெரிய அளவிலான பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பறித்துச் செல்கின்றனர். மற்ற காய்கள் விலை போகாமல் நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தர்பூசணி சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மஞ்சள், பருத்திக்கு விற்பனை மையங்கள் மூலம் விற்கப்படுவது போல், தர்பூசணி உள்ளிட்ட சீசன் காய்களுக்கும் விற்பனைக்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.