சென்னை: “பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, இரு கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி நிகழும் மோதலை தடுக்க தகுந்த ஆலோசனைகளை வழங்கும்படி, இரு கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், மாணவர்கள் அமைப்புகளுக்கும் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போலீஸார் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் 231 மாணவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்து. அதேபோல உயர் கல்வித்துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை ஆய்வு செய்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துள்ளனர். இதேபோல நோபல் பரிசு வென்ற சர்.சி.வி. ராமன் மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் பிரபலமாக இருந்த பல நீதிபதிகள் மாநிலக் கல்லூரியில் படித்தவர்கள்.
புகழ்பெற்ற இந்த இரு கல்லூரிகளிலும் தற்போது பயிலும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. இந்தக் கல்லூரி மாணவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது வேதனையளிக்கிறது. யாரும் பிறக்கும்போதே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. மாறாக உருவாக்கப்படுகின்றனர். எனவே கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கேற்ப கல்லூரி மாணவர்களுக்கிடையே நிகழும் மோதல் சம்பவங்களுக்கு தீர்வு காண, பள்ளிகளிலும் அடிக்கடி பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை நடத்தி மாணவர்களின் நல்வாழ்க்கைக்கும், அவர்களின் பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு காண வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.