நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சுதந்திர போராட்ட காலத்தில் நிறுவப்பட்டது. காலப்போக்கில், இதை நடத்தி வந்த நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அந்த நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் ரூ.90 கோடி கடன் வாங்கியது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் தலா 38 சதவீத பங்குகள் வைத்துள்ளனர். மீதி பங்குகளும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெயரில் உள்ளன. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களை வெறும் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் மூலம் சோனியாவும் ராகுலும் கைப்பற்றிக் கொண்டதாகவும், இதில் சட்டவிரோதமாக பண பரிமாற்ற தவறுகளும் அடங்கியுள்ளன என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ-யும் அமலாக்கத்துறையும் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இவ்வழக்கில், எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதைத் தொடர்ந்து. அடங்கிக்கிடந்த அரசியல் யுத்தம் மறுபடி ஆரம்பமாகிவிட்டது. குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா, சுமன் துபே ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ‘இது ஆளும் பிஜேபி-யின் அரசியல் சூழ்ச்சி’ என்று சொல்லி, நாடெங்கிலும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது காங்கிரஸ்.
தங்களுக்கு சாதகமாக அல்லது தங்கள் அரசியல் எதிரிக்கு பாதகமாக ஒரு தீர்ப்பை நீதிமன்றம் சொல்லும்போதும், ‘நீதி வென்றது’ என்று முரசு கொட்டும் வழக்கம் அரசியலில் இருக்கிறது. அதுவே, தங்களுக்கு பாதகமான முடிவுகள் வெளியாகும்போது மறைமுகமாக நீதித்துறையின் மாண்பையே ஐயப்பட்டு சில தலைவர்கள் அறிக்கை விட்ட அதிர்ச்சி சம்பவங்களும் உண்டு.
குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, புகார், வழக்கு டைரி உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார. தங்களுக்கு எதிராக தொடுக்கபட்டுள்ள இந்த வழக்கை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அதில் முழுமையாக தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து, தாங்கள் நிரபராதி என்று நிரூபிப்பதற்குத் தேவையான அத்தனை ஆதாரங்களையும் முன்வைத்து, அக்கினிப் பிரவேசம் செய்வதே காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்!
அதைவிடுத்து, ஆகாத மாமியார் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்பது போல, இந்த விவகாரத்துக்கு வெறும் அரசியல் சாயம் பூச நினைத்தால், அதை காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளும் ஆதரித்தால், அவர்களுக்கு எதிராகவே ஒருநாள் இந்த போராட்ட அரசியல் திசை மாறித் தாக்கும்