சென்னை: தமிழக அரசு புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கிறிஸ்தவ பெருமக்களின் புனித நாட்களில் ஒன்றாக புனித வெள்ளி கருதப்படுகிறது. இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டதையும் குறிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை முன்னிட்டு விரதம் இருப்பதும், ஆலயங்களில் வழிபடுவதும் சிறப்புக்குரியது. கிறிஸ்தவர்கள் அவர்களின் புனித தினமாக புனித வெள்ளியை அனுசரிக்கும் வேளையில் மதுக்கடைகளை திறந்திருப்பது அவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக அமையும். குறிப்பாக கிறிஸ்தவர்களே இப்புனித நாளை ஒட்டி நாளைய தினம் 18.04.2025 புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே தமிழக அரசு, கிறிஸ்தவர்களின் கோரிக்கையை ஏற்று, புனித வெள்ளியின் புனிதத்தை பாதுகாக்கும் விதமாக, அவர்களின் வழிபாட்டிற்கும், கிறிஸ்துவின் புகழுக்கும் ஏற்ப தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் ஏப்ரல் 18, 2025 புனித வெள்ளி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.