ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அபிஷேக் போரெல் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், கே.எல்.ராகுல் 32 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்களும் விளாசி அசத்தினர்.
20-வது ஓவரை வீசிய ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா 19 ரன்களை தாரை வார்த்திருந்தார். இந்த ஓவரில் அவர், 4 வைடுகள், ஒரு நோ பால் வீசியிருந்தார். யார்க்கர், வைடு யார்க்கர் வீச முயன்று தொடர்ச்சியாக தவறுகளை செய்தார் சந்தீப் சர்மா. போதாத குறைக்கு கடைசி பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கொடுத்த எளிதான கேட்ச்சை தீக் ஷனா தவறவிட்டிருந்தார். இந்த ஓவரில் ராஜஸ்தான் அணி செய்த தவறுகள் போட்டியின் முடிவில் அவர்களுக்கு பெரிய பாதகமாக அமைந்தது.
189 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். சாம்சன் 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. எனினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் ராணா ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதையை நோக்கி கொண்டு சென்றது.
ஜெய்ஸ்வால் 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள்,3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்றபோது மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனது. அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 40 பந்துகளில் 77 ரன்கள் தேவையாக இருந்தது. துருவ் ஜூரெல் களமிறங்க நித்திஷ் ராணாதாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்தினார்.
மோஹித் சர்மா வீசிய 17-வது ஓவரில் துருவ் ஜூரெல் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். அதேவேளையில் நித்திஷ் ராணா பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவையாக இருந்தது. 18-வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் முதல் பந்தை வேகம் குறைந்த ஆஃப் கட்டராக வீசினார். அடுத்த பந்தை தாழ்வான ஃபுல்டாஸாக வீசினார். 3-வது பந்தை மீண்டும் வேகம் குறைந்த ஆஃப் கட்டராக வீசினார். இந்த 3 பந்துகளிலும் தலா ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது.
4-வது பந்தை இன்ஸ்விங் யார்க்கராக மிட்செல் ஸ்டார்க் வீச களத்தில் நன்கு செட்டிலாகி இருந்த நித்திஷ் ராணா (28 பந்து, பவுண்டரி 6, சிக்ஸர்கள் 2, ரன்கள் 51) எல்பிடபிள்யூ ஆனார். இது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயருக்கு முதல் பந்தையே மிட்செல் ஸ்டார்க் ஏறக்குறைய யார்க்கர் லென்ந்தில் இன்ஸ்விங்கராக வீசினார். பந்து ஷிம்ரன் ஹெட்மயரின் மட்டை உள்விளிம்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இந்த பந்தில் அதிர்ஷ்டவசமாக ஹெட்மயர் போல்டாகுவதில் இருந்து தப்பித்தார் என்றே கூறவேண்டும். ஒட்டுமொத்தமாக மிட்செல் ஸ்டார்க் 8 ரன்கள் மட்டும் வழங்கி ராஜஸ்தான் அணியின் அழுத்தத்தை அதிகரித்தார்.
மோஹித் சர்மா அடுத்த ஓவரில் வேகம் குறைத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை துருவ் ஜூரெல் லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவையாக இருந்தது. இதில் முதல் பந்தை ஸ்டார்க் யார்க்கராக வீச ஹெட்மயர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஸ்டார்க் வைடு யார்க்கராக வீச துருவ் ஜூரெல் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஃப் சைடில் வீசப்பட்ட அடுத்த பந்தை ஹெட்மயர் கவர் திசையில் தட்டிவிட்டு 2 ரன் சேர்த்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலை
உருவானது. 4-வது பந்தையும் ஸ்டார்க் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீச ஹெட்மயர் எக்ஸ்டிரா கவர் திசையில் தூக்கி அடித்துவிட்டு 2 ரன்கள் சேர்த்தார். 5-வது பந்தை மிட்செல் ஸ்டார்க் நடு ஸ்டெம்பை நோக்கி யார்க்கராக வீசினார்.
இதை ஹெட்மயர் லாங் ஆன் திசையில் தட்டிவிட்டு ஓடினார். 2-வது ரன் சேர்க்க ஹெட்மயர் ஆர்வம் காட்டிய நிலையில் மறுமுனையில் துருவ் ஜூரெல் மறுத்துவிட்டார். இதனால் ஹெட்மயர் அதிருப்தி அடைந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் யார்க்கரை வீச டீப் மிட்விக்கெட் திசையில் தட்டிவிட்டு சாத்தியமில்லாத வகையில் 2 ரன்களுக்காக துருவ் ஜூரெல் ஓடினார். ஆனால் அக்சர் படேல், கே.ராகுல் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
முடிவில் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுக்க ஆட்டம் டையில் முடிவடைந்தது. ஹெட்மயர் 9 பந்துகளில் 15 ரன்களும், துருவ்ஜூரெல் 17 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர். மிட்செல் ஸ்டார்க் இவர்களை எந்த ஒரு கட்டத்திலும் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. பொதுவாக மிடில் ஸ்டெம்புக்கு வீசப்படும் யார்க்கரில் ரன் வேட்டை நிகழ்த்த வேண்டுமானால் பந்தை முன்பே கணித்து கிரீஸில் இருந்து முன்னேறி வந்து அடிக்க வேண்டும். இல்லையென்றால் விக்கெட் கீப்பருக்கு பின்புறம் திருப்பிவிட வேண்டும். ஆனால் இத்தகைய ஷாட்களுக்கு ஷிம்ரன் ஹெட்மயர் பழக்கப்படாதவர். துருவ் ஜூரெல் இதுபோன்ற ஷாட்களை அடிக்கக்கூடியவர்தான். ஆனால் அவரோ முயற்சித்து பார்க்கவில்லை.
போட்டி டையில் முடிவடைந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் இது 15-வது சூப்பர் ஓவராக அமைந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி பார்மில் இல்லாத ரியான் பராக்கையும், ரன்கள் சேர்க்க தடுமாறிய ஷிம்ரன் ஹெட்மயரையும் அனுப்பியது. இது பெரிய அளவில் அதிர்ச்சியாக இருந்தது. அதேவேளையில் கடைசி ஓவரில் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்கே டெல்லி அணி தரப்பில் பந்து வீச வந்தார். மிட்செல் ஸ்டார்க் லெக் திசையில் வீசிய பந்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டார் ஹெட்மயர். அடுத்த பந்தை ஸ்டார்க் யார்க்கருக்கு பதிலாக தவறான லென்ந்த்தில் வீச டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி அடித்தார் ஹெட்மயர். 3-வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. 4-வது பந்தை ஸ்டார்க், ஆஃப்ஸ்டெம்புக்கு வெளியே தாழ்வான புல்டாஸாக வீச, பேக்வேர்டு பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்தார் ரியான் பராக். ஆனால்இந்த பந்தை சைடு கிரீஸை மிதித்தபடி ஸ்டார்க் வீசியதால் நோ பால் வழங்கப்பட்டது.
ஃப்ரீஹிட்டில் மிட்செல் ஸ்டார்க் லெக் ஸ்டெம்பை குறிவைத்து வீசினார். இதை ரியான் பராக் விளாச முயன்றார். ஆனால் பந்து கால்காப்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் பாய்ந்தது. ஆனால் அதற்குள் மறுமுனையில் இருந்த ஷிம்ரன் ஹெட்மயர் ரன் சேர்க்க விரைந்து ஓடினார். ரியான் பராக் ஓட்டத்தை முடிப்பதற்குள் கே.எல்.ராகுல் பந்தை மிட்செல் ஸ்டார்க்கிற்கு நிதானமாக கொடுக்க அவர், ரன் அவுட் செய்தார். ஏற்கெனவே இடது கை பந்து வீச்சாளருக்கு எதிராக இடது கை பேட்ஸ்மேன் திணறி வரும் நிலையில் யஷஸ்விஜெய்ஸ்வால் களமிறங்கினார். 5-வது பந்தைதாழ்வான ஃபுல்டாஸாக ஸ்டார்க் வீச ஹெட்மயர் டீப் மிட்விக்கெட் திசையில் தட்டிவிட்டு 2 ரன்கள் சேர்க்க ஓடினார். ஆனால் ஜேக் பிரேசர் மெக்கர்க் துல்லியமாக மிட்செல் ஸ்டார்க்கிற்கு த்ரோ செய்ய அவர், கச்சிதமாக பந்தை பிடித்து ஸ்டெம்பை தகர்க்க ஜெய்ஸ்வால் பரிதாபமாக வெளியேறினார். இதனால் சூப்பர் ஓவரில் ஒரு பந்தை எதிர்கொள்ளாமல் வீணடித்து 11 ரன்கள் மட்டுமே சேர்த்தது ராஜஸ்தான் அணி.
12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி தரப்பில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சந்தீப் சர்மா பந்து வீசினார். வேகம் குறைத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட ஷார்ட் பாலை கே.எல்.ராகுல் டீப் மிட்விக்கெட் திசையில் தட்டிவிட்டு 2 ரன் சேர்த்தார். அடுத்த பந்தையும் சந்தீப் சர்மா அதே பாணியில் வீச கே.எல்.ராகுல் டீப் பேக்வேர்டுபாயிண்ட் திசையில் பவுண்டரி விரட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. 4-வது பந்தையும் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியேவேகம் குறைத்து சந்தீப் சர்மா வீச டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டையை சுழற்றி டீப் மிட் விக்கெட்திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட டெல்லிஅணி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி அணியில் கடைசி ஓவரையும், சூப்பர் ஓவரையும் அற்புதமாக வீசி வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்திருந்தார் மிட்செல் ஸ்டார்க். சர்வதேச கிரிக்கெட்டில் பல நெருக்கடியான தருணங்களில் ஸ்டார்க் அற்புதமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இதை அவர், தற்போது ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் செய்ய தொடங்கி உள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி பதற்றத்தில் தடுமாறியதாலும், சூப்பர் ஓவரை சரியாக நிர்வகிக்காததாலும் வெற்றி பெற வேண்டிய போட்டியை எளிதாக இழந்துள்ளது.