புதுடெல்லி: புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கிறிஸ்தவ பெருமக்களின் புனித நாட்களில் ஒன்றாக புனித வெள்ளி கருதப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “புனித வெள்ளி நாளில் நாம் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூருகிறோம். இந்த நாள் நம்மை கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் தூண்டுகிறது. அமைதியும், ஒற்றுமை உணர்வும் எப்போதும் மேலோங்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கியது.. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த ஏப்.12 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.18) புனித வெள்ளியாகக் கடைபிடிக்கப்படுகிறது.இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டதையும் குறிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.