திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் திருப்பதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ள கோசாலை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், “தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 3 மாதங்களில் மட்டும் திருப்பதி கோசாலையில் நூற்றுக்கும் அதிகமான பசுக்கள், கன்றுகள் சரிவர தீவனம் இல்லாமலும் உயிரிழந்துள்ளன” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி எம்எல்ஏவாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்த கருணாகர் ரெட்டி குற்றம் சாட்டினார்.
ஆனால், “கருணாகர் ரெட்டி குற்றம் சாட்டியது போல், கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறக்கவில்லை” என்று தேவஸ்தானம் பதிலளித்தது. இந்நிலையில், திருப்பதி எம்.பி. குருமூர்த்தி, முன்னாள் துணை முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ரோஜா உட்பட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கருணாகர் ரெட்டியின் வீட்டில் குவிந்தனர். அவர்கள் பாத யாத்திரையாக கோசாலை வரை சென்றனர். அதற்குள் திருப்பதி எம்எல்ஏ ஆரணி ஸ்ரீநிவாசுலு, சந்திரகிரி எம்எல்ஏ நானி, பூதலப்பட்டு எம்எல்ஏ முரளி, ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ பொஜ்ஜல வெங்கட கதீர், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி உட்பட பலர் கோசலைக்கு சென்று பார்வையிட்டனர்.
கருணாகர் ரெட்டி கூறியது போல் பராமரிப்பு இன்றி 3 மாதங்களில் நூற்றுக்கணக்கான மாடுகள் இறக்கவில்லை. போதிய தீவனங்கள் நிலுவையில் உள்ளது. சுற்றுச்சூழலும் சுத்தமாக வைத்துள்ளனர். பசு மாடுகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளன. கருணாகர் ரெட்டி இப்போது இங்கு நேரில் வந்தால் நாங்கள் கோசாலையின் நிலவரத்தை காண்பிக்கிறோம் என்று அழைத்தனர். மேலும், கருணாகர் ரெட்டிக்கே நேரடியாக தொலைபேசியிலும் அழைப்பு விடுத்தனர்.
கருணாகர் ரெட்டியும் தனது ஆதரவாளர்களுடன் கோசாலைக்கு செல்ல முயன்றார். ஆனால், பிரச்சினை ஏதும் வரக்கூடாது என்பதற்காக அதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால், என்னை ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டனர் என கருணாகர் ரெட்டி கூறி, வீட்டின் முன் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். கூட்டணி கட்சியினர் கோசலையில் இருந்து சென்ற பின்னரே மற்றவர்களுக்கு அனுமதி என திருப்பதி எஸ்.பி. ஹர்ஷவர்தன் உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.