ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜுன் 14 வரை 61 நாட்கள் தமிழகத்தில் இந்த தடை அமலில் இருக்கும். இதனால் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் ஆழங்குறைந்த பகுதிகளில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் விசைப்படகுகளில் பழுது நீக்கும் பணிகளை தொடங்க உள்ளனர். இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் வழக்கம் போல மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இவற்றால் பிடிக்கப்படும் மீன்கள் போதுமானதாக இல்லை என்பதால் தற்போது தமிழகத்தின் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலை உயரத் துவங்கி உள்ளது.
இது குறித்து ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் இயந்திரம் பொறுந்திய நாட்டுப்படகு மீனவர்கள் , கரை வலை மீனவர்கள், பாய்மரப் படகு மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனர். இவற்றை கடற்கரை பகுதியில் வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது ரூ. 800 விற்ற சீலா மீன் ரூ 900, ரூ.300 விற்ற விலை மீன் ரூ 400, ரூ.400 விற்ற ஊளி மற்றும் பாரை மீன் ரூ.500, ரூ. 250 விற்ற நகரை மீன் நகரை 350, ரூ. 100 விற்ற சூடை மீன் ரூ. 150, ரூ.400 விற்ற கணவாய் ரூ.500, ரூ.500 விற்ற நண்டு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மீனின் விலை உயரும், என தெரிவித்தனர்.