சின்னத்திரை நடிகர் பாலா விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் பாலா. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வப்போது கஷ்டப்படுகிறவர்கள் வீட்டுக்கே சென்று உதவிகள் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சினிமா நிகழ்ச்சி ஒன்றில், பாலா நாயகனாக நடிக்கும் படத்தினை தயாரிக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ்அறிவித்தார். ஆனால், தற்போது பாலா நாயகனாக நடிக்கும் படத்தினை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிக்கவுள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கவுள்ளார். இதில் பாலாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக விவேக் மெர்வின் பணிபுரிய இருக்கிறார்கள்.
பாலா நாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பை லாரன்ஸ் வெளியிட்டார். அதில் “வணக்கம் மக்களே… என்னுடைய தம்பி பாலா தனது வாழ்நாள் கனவை நனவாக்கப் போகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராகவேந்திரா நிறுவனம் தயாரிப்பில் அவரை அறிமுகப்படுத்துவதாக நான் அறிவித்திருந்தேன். ஆனால் ஒரு வாரத்திற்குள், ஒரு நல்ல தயாரிப்பாளர் நல்ல கதையுடன் அணுகினார். ஆம், அவரது முதல் படம் விரைவில் வெளியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.