திருப்பத்தூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி

திருப்பத்தூர் நகராட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி (ARV – Anti-Rabies Vaccine) செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அவை பொதுமக்களை துரத்தி, தாக்க முயல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் தலைமையில், கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ஏ.ஆர்.வி. தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி செலுத்துவதுடன், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ABC – Animal Birth Control) திட்டத்தின் கீழ் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இப்பணியில், பொதுமக்களும் தாமாக முன்வந்து தங்களது வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவற்றின் மீது வர்ண ஸ்பிரே பூசப்படுகிறது. சிறப்பு வலைகள் மூலம் நாய்கள் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அவை பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் விடப்படுகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் சார்பில் இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சிறப்பு தடுப்பூசி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.