பெங்களூரு: பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் பேரன் பிறந்த 17 மாதங்களில் டிவிடெண்ட் மூலமாக ரூ.3.3 கோடியை சம்பாதித்துள்ளார்.
இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும், ரோஹன் மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.
நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் இங்கிலாலந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் தம்பதிக்கு ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர், பெங்களூரில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர். பிறந்து 17- மாதமே ஆன ஏகாக்ராவுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு டிவிடெண்டாக மட்டும் ரூ.3.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஏகாக்ராவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.04 சதவீத பங்குகள் அதாவது 15 லட்சம் பங்குகள் உள்ளது. இது, நாராயண மூர்த்தி தனது மூன்றாவது பேரக்குழந்தையான ஏகாக்ராவுக்கு 4-மாதமாக இருக்கும்போது பரிசாக கொடுத்தது.
அப்போது அதன் மதிப்பு ரூ.240 கோடி. இதுவரை ஏகாக்ராவுக்கு டிவிடெண்டாக மட்டும் ரூ.10.65 கோடி கிடைத்துள்ளது. தனது 1 வயது 5 மாதத்தில் இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றவர் ஏகாக்ரா.