மும்பை: மும்பையில் கரோனா தொற்று நேர்மறை விகிதம் ஆறு சதவீதமாக உயர்ந்துள்ளது. மும்பை நகரில் 506 புதிய கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
இந்தியாவில் மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,745 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று 2,338 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகமாக பதிவாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,636ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2,236 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,26,17,810 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 18,386 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக மும்பை நகரில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மும்பையில் கரோனா தொற்று நேர்மறை விகிதம் ஆறு சதவீதமாக உயர்ந்துள்ளது. மும்பையில் 506 புதிய கரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளன. இது இந்த ஆண்டு பிப்ரவரி 6 முதல் (536 எண்ணக்கை) அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு ஏப்ரலில் பதிவான எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மே மாதத்தில் பதிவான கோவிட் தொற்று எண்ணிக்கையில் மும்பையில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மும்பையில் கரோனா சோதனை வேகப்படுத்தப்படும் என்று குடிமை அமைப்பான மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:
“மும்பையில் தினசரி கரோனா தொற்று பெருமளவில் அதிகரித்துள்ளன. போர்கால அடிப்படையில் சோதனையை உடனடியாக அதிகரிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். ஆய்வகங்கள் முழு அளவில் செயல்பாடுகளுடனும், முழு பணியாளர்களுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பாக கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும் 12-18 வயது பிரிவினருக்கு கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை தீவிரமாக்க வேண்டும். மருத்துவமனைகளை போதுமான பணியாளர்களுடன் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளும் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கரோனா வார்டு போர் அறைகளின் நிலையை மறுஆய்வு செய்தல், ஊழியர்கள், மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றை முழுமையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதுமட்டுமின்றி பிற ஆயத்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மருத்துவமனையில் சேர்க்கை அதிகரித்தால், மலாட்டில் உள்ள பிரமாண்ட கரோனா மருத்துவமனை தேவைப்பட்டால் பயன்படுத்தப்படும்.