புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மே மாதத்தில் வசூலான தொகை ரூ.1.40 லட்சம் கோடியாகும். இது ஏப்ரல் மாதத்தில் வசூலான தொகையை விட 15 சதவீதம் குறைவாகும்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மே மாதம் ரூ.1,40,885 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது ஏப்ரலில் வசூலான தொகையை விட (ரூ.1.68 லட்சம் கோடி) குறைவு.
இருப்பினும் 2021 மே மாதம் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் கூடுதலாகும். அப்போது வசூலான தொகை ரூ.97,821 கோடியாகும்.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ரூ.25,036 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி)ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) ரூ.73,345 கோடியும் வசூலாகியுள்ளது. இதில் இறக்குமதி பொருள்கள் மீதான வரிவிதிப்பு மூலம் வசூலான ரூ.37,469 கோடியும், செஸ் ரூ.10,502 கோடியும் அடங்கும். இறக்குமதி பொருள்கள் மீதான வரி வசூல் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி சேவை மூலமான வரி வசூல் 44 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நான்காவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. நிதி ஆண்டின் தொடக்க மாதத்தில் (ஏப்ரல்) செலுத்தப்படும் வரிக்கு ரிட்டர்ன் பெறப்படுவதால் அடுத்து வரும் மே மாதம் வரி வசூல் குறைவாகத்தான் இருக்கும்.