துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதல் சம்பவத்தின்போது துணிச்சலுடன் செயல்பட்டு பெரும் விபத்தைத் தடுத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற போயிங் பயணிகள் விமானத்தில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில், இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் பொறுமை, விவேகம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தினார். இஸ்ரேல் பிரதமர் கூறியதைப் போல, ஸ்மித் மச்சார் 9/11 போன்ற ஒரு பேரழிவைத் தடுத்துள்ளார். இது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.
இன்று அவரது தந்தை பூபேந்திர பாய், தாய் கீதா பெஹன் மற்றும் மனைவி சோனல் ஆகியோருடன் நான் உரையாடினேன். இன்று உலகம் முழுவதும் அவரைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. இந்தியாவின் பெருமையை உயர்த்திய சகோதரர் ஸ்மித்தை பாராட்டுவதுடன், அவரது நல்வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
யுபிஎஸ்சி தனது 100 ஆண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இது ஒரு நூற்றாண்டைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அதன் பாரம்பரியத்தையும் கொண்டாடும் நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியத்துடன் யுபிஎஸ்சி பயணம் தொடர்கிறது.

இந்த 100 ஆண்டுகாலப் பயணத்தில் தலைமுறைகள் மாறின, அரசுகள் மாறின, தொழில்நுட்பம் மாறியது, பாடத்திட்டங்களும் மாறின. ஆனால், யுபிஎஸ்சி மீதான நம்பிக்கை தொடர்ந்து வலுவாக உள்ளது.
இன்று யுபிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்காற்றுவார்கள். இதை கருத்தில் கொண்டு, ‘தேசமே முதலில், குடிமக்களே முதலில்’ என்ற இரண்டு கொள்கைகளை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசுப் பதவியின் மீதான ஈர்ப்பால் அல்லாமல், மக்கள் சேவை மீதான ஆர்வத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்களை பொதுச் சேவைக்கு கொண்டு வர வேண்டும். எனவே, பணி நியமனத் தேர்வு என்பது ஒருவர் எவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை மட்டும் சோதிப்பதாக இருக்கக்கூடாது. அந்த இளைஞர் ஏன் குடிமைப் பணியில் இணைய விரும்புகிறார் என்பதையும் அறியும் வகையில் இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் அரசு மட்டுமே மக்களைப் பராமரிக்கும் அமைப்பு என்றும், அரசே முழு அதிகாரம் கொண்ட அமைப்பு என்றும் கருதப்பட்ட காலம் இருந்தது. ஆனால், தற்போது ‘குடிமக்களே தெய்வம்’ என்ற கொள்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். குடிமக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
ஏழைகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இரக்க உணர்வு கொண்டவர்களும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் புதுமையான அணுகுமுறையைக் கையாளக்கூடியவர்களும், நாட்டின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் வல்லுநர்களும் நமக்குத் தேவை. சட்டங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதுடன், ஒரு குறிப்பிட்ட சட்டம் உண்மையில் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா என்பதையும் புரிந்துகொள்ளக்கூடிய வல்லுநர்கள் தேவை.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.