ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பின்பு கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு ஒரே நாளில் 5 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்தன. இதில் இறால் மட்டுமே 3 லட்சம் கிலோ கிடைத்தன.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகு மீனவர்கள் மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்தது. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடித்து வந்தனர்.
இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் ஜுன் 14-ல் முடிவடைந்ததால், அன்று மாலையே 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4,000மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இப்படகுகள் நேற்று அதிகாலை முதல்ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பத் தொடங்கின.
ஒரே நாளில் மொத்தம் 5 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்தன. இதில் இறால் மட்டுமே 3 லட்சம் கிலோ அளவுக்கு கிடைத்துள்ளன.
ஒவ்வொரு படகுக்கும் 400 கிலோ முதல் 500 கிலோ வரை ஏற்றுமதி தரம் வாய்ந்த இறால் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வழக்கமாக முதல் தரமான இறால் கிலோ ரூ.500 வரை விலை போகும்.
ஆனால் நேற்று எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் இறால் கிடைத்ததால், விலை நிர்ணயம் செய்யாமல் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இதனால் 500 ரூபாய்க்கும் குறைந்த விலையே கிடைக்க வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.