புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2024-ம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகளை இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ளது. இதில் தேசிய அளவில் ஷக்தி துபே முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹரிஷிதா கோயல் மற்றும் டோங்ரே அர்சித் பராக் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
கடந்த 2024, ஜுன் மாதம் 16ம் தேதி நடந்த தேர்வினை 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் எழுதினர். அவர்களில் மொத்தம் 1009 பேர் குடிமை பணிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். 2024, செப்டம்பரில் நடந்த எழுத்துத் தேர்வில் (முதன்மை) மொத்தம் 14,627 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 2,845 பேர் ஆளுமைத் தேர்வுக்குத் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே மொத்தம் 1009 பேர் (725 ஆண்கள், 284 பெண்கள்) தேர்வு ஆணையத்தால் பல்வேறு பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
குடிமைப் பணிகளுக்காக இறுதியாக தேர்வான முதல் ஐந்து பேரில் மூன்று பேர் பெண்கள், இரண்டு பேர் ஆண்கள். 2024-ம் ஆண்டு குடிமைப்பணிகள் தேர்வில் ஷக்தி துபே முதலிடத்தைப் பிடித்துள்ளார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளம் வேதியியல் பட்டம் பெற்ற இவர், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் என்பதை விருப்பப் பாடமாக எடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், பரோடா எம்எஸ் பல்கலைக்கழக்கத்தின் இளம் வணிகவியல் பட்டதாரியான இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஹர்ஷிதா கோயல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வேலூர் விஐடியின் முன்னாள் மாணவரான டோங்கரே அர்சித் பராக் தத்துவத்தை விருப்பப் பாடமாக எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றவர். அதேபோல் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள ஷாஹ் மார்கி மற்றும் ஆகாஷ் கார்க் ஆகியோரும் பொறியியல் பட்டதாரிகளே.
பல்வேறு பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 45 பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களில் 12 பேர் எலும்பியல் குறைபாடும், 8 பேர் பார்வைக்குறைபாடும், 16 பேர் செவித்திறன் குறைபாடும், 9 பேர் பல்வகை குறைபாடுகளும் உடைய மாற்றுத்திறனாளிகள்.
தேர்வாகி உள்ளவர்கள், இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) மற்றும் மத்திய பணிகளுக்கு குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’) பணிகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.