சென்னை: உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக உள்ள ஒவ்வொரு தேசத்தின் வீடுகளிலும் சச்சின் டெண்டுல்கர் எனும் வீரரின் பெயரை அறிந்திருப்பார்கள். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சினுக்கு இன்று பிறந்தநாள். 52-வது வயதை அவர் எட்டியுள்ளார்.
கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வு பெறும் வரை ரன் சேர்ப்பதில் பிஸியாக இருந்தவர். கடந்த 1989-ல் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் நடந்த அனைத்தும் சாதனை. அவரது ஆட்ட நேர்த்தி மற்றும் தான் நேசித்த விளையாட்டுக்காக வெளிக்காட்டிய அர்ப்பணிப்பு என எல்லாமும் இதில் அடங்கும்.
இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் மற்றொரு ஜாம்பவானான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் உடனான தனது தனிப்பட்ட உரையாடலை பேட்டி ஒன்றில் இப்போது பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு கிரிக்கெட்டை ஜாம்பவான்களும் என்ன பேசினார்கள் என்பதை பார்ப்போம்.
“அப்போது நாங்கள் இருவரும் பேட்டிங் கலை குறித்து பேசி இருந்தோம். பந்து வீச்சாளரின் ரிஸ்ட் பொசிஷனை பார்த்து சிறந்த பேட்ஸ்மேன்களால் அந்த டெலிவரி என்ன என்பதை எப்படி முன்கூட்டியே அறிய முடிகிறது, அது காற்றில் எந்த பக்கம் சுழலும் போன்றவற்றை அறிந்து செயல்பட முடியும் போன்றவற்றை அப்போது பேசி இருந்தோம்” என சச்சின் தெரிவித்துள்ளார்.
பிராட்மேனின் 90-வது பிறந்தநாளுக்கு சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த அழைப்பின் பேரில் பங்கேற்றார். அப்போது அவர்கள் இருவரும் பேட்டிங் குறித்து பேசி உள்ளார்கள்.
“சச்சினின் ஆட்ட நுணுக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது ஆட்டத்தை பார்க்குமாறு நான் என் மனைவியிடம் சொன்னேன். ஏனென்றால் எனது ஆட்டத்தை நான் பார்த்தது இல்லை. ஆனால், சச்சின் என்னை போலவே விளையாடுகிறார் என கருதுகிறேன். அவரது ஆட்டம் நேர்த்தியாக இருந்தது” என கடந்த 1996-ல் சச்சின் குறித்து பிராட்மேன் இப்படி சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின்…!