மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான தடை நீடிக்கிறது.

தமிழகத்தில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகும் என்பதால் காலியாக உள்ள 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது.

இதை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையால் உயர் நீதிமன்ற கிளையின் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 14 மாவட் டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான விண்ணப்பம் முறைப்படி பெறப்படவில்லை.

 

இந்நிலையில் தடையை நீக்கக்கோரி அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த மனுவையும் சென்னைக்கு மாற்ற பதிவுத்துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனால் 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத் துக்கான தடை நீடிக்கிறது.