“மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாநில அரசினுடைய அமைச்சரையே அழைக்காமல் விழா நடத்துவது என்பது, முழுக்க முழுக்க ஒரு சட்ட விரோதம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு இணை வேந்தராக இருக்கக்கூடிய உயர் கல்வித்துறை அமைச்சரையே அழைக்காமல், சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில், ஒரு மத்திய அமைச்சரை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்துவதும், இதன்மூலம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதும்தான் ரொம்ப அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாநில அரசினுடைய அமைச்சரையே அழைக்காமல் விழா நடத்துவது என்பது, முழுக்க முழுக்க ஒரு சட்ட விரோதம். அதற்கு ஆளுநரே தலைமை தாங்குகிறார். ஆளுநர் அலுவலகம் அதற்கு அனுமதியளிக்கிறது.எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகள் சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதை நாங்களும் பார்க்கிறோம். ஒரு கூட்டத்தில், அதிகாரிகளுடன் பேசும்போது, மனுக்களை வாங்கும்போது, அமைச்சர்கள் பொறுப்புணர்வுடன், நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மக்களிடம் அமைச்சர்கள் ஏடாகூடமாக பேசினால், மக்களும் திரும்பி பேசினால் என்ன செய்வார்கள்? ” என்றார்