புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதனிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் செயலாளர் தேவஸ்ரீ முகர்ஜீ, இந்திய அரசின் முடிவு குறித்து பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சைது அலி முர்தாஷாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் மாற்றங்களுக்கான அறிவிப்பை இந்தியா தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒப்பந்தத்தின் பிரிவு XII (3)-ன் கீழ் 1960ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்கக்கோரி பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தின் பின் இணைப்புகளில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உள்ள கடமைகளை மறு மதிப்பீடு செய்யவேண்டும்.
இந்த மாற்றங்களில், மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றம், மாசில்லாத எரிசக்தி வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டிய அவசியம், ஒப்பந்தத்தின் கீழ் நதிநீர் பகிர்வுக்கான அடிப்படையிலான அனுமானங்களில் பிற மாற்றங்கள் ஆகியவைகளும் அடங்கும்.
நல்லெண்ணெத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மதிப்பது அதன் அடிப்படை கடமைகளில் ஒன்று. ஆனால் நாங்கள் கண்டது எல்லாம் இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் எல்லைதாண்டிய பயங்கரவாத தாக்குதலைத் தான். இதன்விளைவாக ஏற்படும் பாதுகாப்பு நிச்சயமற்றத்தன்மை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுத்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் பிற மீறல்களைத் தவிர, ஒப்பந்ததத்தின் படி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்தியாவின் கோரிக்கைகளை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால் அது ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இதனால் 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமரின் உத்தரவு படி, ஜல்சக்தி துறை செயலாளர் சி.ஆர். பாட்டீல் தலைமையில் பல்வேறு கூட்டங்கள் நடந்தன.
புதன்கிழமை (ஏப்.23) பிரதமர் மோடி தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 9 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படியில் உலக வங்கியின் உதவியுடன் கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது, சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய ஆறு நதிகளின் நீரை இந்தியா – பாகிஸ்தான் இடையே பகிர்ந்து கொள்வது பற்றியது. இந்த ஒப்பந்தத்தின் படி, மேற்கு பகுதி நதிகளை (சிந்து, ஜீலம், செனாப்) பாகிஸ்தானும், கிழக்கு பகுதி நிதிகளை (ரவி, பியாஸ், சட்லஜ்) இந்தியாவும் பகிர்ந்து கொள்கின்றன.