திருவள்ளூர்: திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா? என, ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இன்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, சிக்னல் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்த போது, தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் உள்ள ’எம்’பின் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த வழித்தடத்தில் அப்போது எவ்வித ரயில்களும் இயக்கப்படாததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து, அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் வரும் விரைவு ரயில்கள், மின் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீஸார், மோப்ப நாய் ஜான்சி சகிதம், ரயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து, ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அகற்றப்பட்ட’எம்’பின் போல்ட் நட்டுகளை பொருத்தி, தண்டவாளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.