இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, தொடரையும் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை அந்த அணி இழந்த நிலையில் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. அதனால் தொடர் சமன் ஆனது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவான், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் தென்னாப்பிரிக்க முதலில் பேட் செய்து வெறும் 27.1 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை வெல்லும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற இந்த தொடரில் வெல்வது தென்னாப்பிரிக்காவுக்கு மிகவும் முக்கியம். இல்லையெனில் தகுதி சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.