ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிர்வினையாக, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் விவாதம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா கூறும்போது, “இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நேரம் இது. இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2011-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் போராட்டம்: இதனிடையே, ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய அரசுக்கு அஞ்சமாட்டோம் என பலரும் விதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை போராட்டத்தில் 185 பேர் வரை பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.