ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மைக்கேல்’. இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழில் படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.
சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? – முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக்கேஜுடன் ஸ்டைலிஷ் ரெட்ரோ லுக்கில் வெளியாகியிருக்கிறது படத்தின் டீசர். ஒரு சில வினாடிகளே வரும் விஜய் சேதுபதியின் லுக் மாஸாக இருக்கிறது. காதல் கலந்து அதிரடி படமாக உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது. ‘வேட்டை தெரியாத மிருகத்த மத்த மிருகங்களெல்லாம் வேட்டையாடிடும் மைக்கேல். பசியில இருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ங்குற அவசியமில்ல’ மற்றும் ‘மன்னிக்கும்போது மனுசங்க கடவுளாகுறாங்க மைக்கேல்; நான் மனிசனாவே இருக்கேன் மாஸ்டர், கடவுளாக வேண்டாம்’ போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.
சந்தீப் கிஷனின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம் ஆகியவை சிறந்த அக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது