சிட்னியில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 27-வது போட்டியில் குரூப் 1 அணிகளான இலங்கையும், நியூஸிலாந்தும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 15/3 என்ற நிலையில் இறங்கி 61 பந்துகளில் சதம் விளாசி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டார். பிறகு ஆடிய இலங்கை அணி போராடாமல் சரணடைந்து படுதோல்வி கண்டது.
168 ரன்கள் இலக்கை விரட்ட களமிறங்கிய இலங்கை அணி ட்ரெண்ட் போல்ட், சவுதி, மிட்செல் சாண்ட்னரின் துல்லியத் தாக்குதலில் 19.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி கண்டது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி குரூப் 1 அட்டவணையில் 5 புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட்டில் அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மிக மிகக் கடினமாகியுள்ளது.
ஹார்ட் பிட்ச் என்பார்களே அத்தகைய சிட்னி பிட்சில் புதிய பந்தில் பேட்டர்கள் விவேகம் காட்டுவதுதான் நல்லது. ஆனால், நியூசிலாந்தின் டாப் 3 வீரர்களும் இதைச் செய்யவில்லை. இலங்கை அணியின் டாப் 4 வீரர்களும் நிதானம் காட்டவில்லை. கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் இருந்தபோது கையில் வந்த கேட்சை தவறவிட்ட பீல்டர் நிசாங்கா பிறகு ஓப்பனிங்கில் இறங்கி சவுதியின் நேர் பந்தை அசிங்கமாக கிராஸ் பேட் ஷாட் முயற்சி செய்து ‘டெட் பிளம்ப்’ எல்பி ஆகி சரிவைத் தொடங்கி வைத்தார்.
போல்ட் வீசிய இன்னிங்சின் 2-வது ஓவரில் இலங்கை அணிக்கு ஆணியறைந்தார். இலங்கையின் பார்மில் இருக்கும் குசல் மெண்டிஸுக்கு அருமையான ஒரு பந்தை வெளியே ஸ்விங் செய்ய கான்வேயிடம் கேட்ச் ஆகி வெளியேறினர். அதே ஓவரின் கடைசி பந்தில் தனஞ்ஜயாவும் அசிங்கமாக ஒரு ஷாட்டை ஆடப்போய் போல்ட் பந்தில் பவுல்டு ஆனார். இலங்கை 5/3 என்று தடுமாறியது. போல்ட்டின் அடுத்த ஓவரில் சரித் அசலங்கா, விரல் நுனியில் பிடித்து போல்ட் வீசிய ‘நக்கிள்’ பந்துக்கு பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் 8/4.
பனுகா ராஜபக்ச இறங்கி கொஞ்சம் ஆக்ரோஷம் காட்ட ஸ்கோர் 24 ரன்களுக்கு வந்தபோது கருணரத்னே 3 ரன்களில் தேவையில்லாமல் சாண்ட்னர் பந்தை தூக்கி அடித்து டீப் மிட்விக்கெட்டில் நின்றிருந்த ஒரே பீல்டரிடம் குறிபார்த்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் 24/5. பனுகா ராஜபக்ச மட்டுமே ஒருமுனையில் கொஞ்சம் அபாயகரமாக ஆடிக் காட்டினார். அவர் 22 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து லாக்கி பெர்கூசன் பந்தை தூக்கி அடிக்க முயன்று மிட் ஆஃபில் கேட்ச் ஆனார்- 58/6. வனிந்து ஹசரங்கா, இஷ் சோதி பந்தை நேராக எக்ஸ்ட்ரா கவரில் வில்லியம்சன் கையில் கொடுக்க, மாஹிஷ் தீக்ஷணா சாண்ட்னரிடம் சாய இலங்கை 65/8 என்று தவிர்க்க முடியா தோல்வியை நோக்கிச் சென்றது.
கடைசியில் தசுன் ஷனகா 31 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கேப்டனாக பொறுப்பாக ஆடினார். நெட் ரன் ரேட்டுக்காக கொஞ்சம் ரன்களைத் தேற்றி கடைசியில் 9-வது விக்கெட்டாக, போல்ட்டின் பவுன்சரில் 4-வது விக்கெட்டாக டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷனகா 4 பவுண்டரிகள் ஒரு சிக்சரை விளாசினார். கடைசியாக லாஹிரு குமாரா விக்கெட்டை இஷ் சோதி வீழ்த்த, இலங்கை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
ட்ரெண்ட் போல்ட் அதியற்புதமாக வீசி 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சாண்ட்னர் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டையும், டைட்டாக வீசிய டிம் சவுதி 4 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
15/3 என்ற சரிவிலிருந்து மீட்ட கிளென் பிலிப்ஸின் அற்புத சதம்; இரண்டு கேட்ச்களை விட்டு இலங்கை சொதப்பல்: நியூஸிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலன் அன்று ஆஸ்திரேலியாவையே புரட்டி எடுத்தார். இன்று என்ன செய்வாரோ என்று பயந்து கொண்டிருந்த இலங்கைக்கு புதிர் வீச்சாளர் தீக்ஷனா மூலம் தீர்வு கிடைத்தது. முதல் ஓவரின் 4-வது பந்திலேயே ஃபின் ஆலன் அனாவசியமாக ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் விளாச முயன்று பவுல்டு ஆகிவெளியேறினார். 3-வது ஓவரில் நியூஸிலாந்தின் மிக முக்கியமான விக்கெட்டான இடது கை வீரர் டெவன் கான்வே விக்கெட்டை இன்னொரு ஸ்பின்னர் டிஎம் டிசில்வா கைப்பற்றினார். இவரும் தேவையில்லாமல் உள்ளே வந்த மிக மிக மெதுவான பந்தை ஊருக்கு முன்னாடியே ஒதுங்கி கொண்டு விளாச நினைத்து பந்தை விட்டார், பவுல்டு ஆகி 1 ரன்னில் வெளியேறினார்.
கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபார்ம் மேலும் கவலைக்குரியதாக மாறிவிட்டது. தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்தப் போட்டியிலும் ரஜிதாவை ஒரு பவுண்டரி அடித்த போது சரி ஃபார்முக்கு வந்து விட்டார் என்று பார்த்தால் ரஜிதா வீசிய அருமையான எழும்பிய அவுட் ஸ்விங்கர் பந்துக்கு கொஞ்சம் கூட கால்களை நகர்த்தாமல் மட்டையை மட்டும் விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். வில்லியம்சன் 8 ரன்னில் அவுட்.
15/3 என்ற நிலையில் நியூஸிலாந்தின் ஆபத்பாந்தவன் கிளென் பிலிப்சும், டேரில் மிட்செலும் ஒன்று சேர்ந்தனர். கிளென் பிலிப்ஸ் இந்த கிரேட் டி20 சதம் வந்ததற்குக் காரணம் அவர் 12 ரன்களில் இருந்த போது ஹசரங்க டி சில்வா பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடிக்க அங்கு கையில் வந்து உட்கார்ந்த கேட்சை நிசாங்கா தவற விட்டார். அங்கிருந்து பிலிப்ஸை ஒன்றும் செய்ய முடியவில்லை. பவுண்டரிகள் அடிக்க ஆரம்பித்தார்.
சமிகா கருணரத்னேவை 10-வது ஓவரில் ஃபைன் லெக்கில் சிக்ஸ் விளாசினார். மிட்செல் சிங்கிள் எடுத்து கொடுக்க கிளென் பிலிப்ஸ் பெரும்பாலான ஸ்ட்ரைக்கை தன் வசம் வைத்திருந்தார். இது இலங்கைக்கு பெரிய தலைவலியாக மாறிப்போனது. மீண்டும் 45 ரன்களில் கிளென் பிலிப்ஸ் இருந்த போது 14வது ஓவரில் கேப்டன் தசுன் ஷனகா ஒரு கேட்சை விட்டார். ஆனால் இது முந்தைய கேட்சை விட கடினமானது. ஆனால், கேட்ச் விட்டது விட்டதுதான். அது 2வது லைஃப். அதே ஓவரில் கருணரத்னேவை லாங் ஆன் பவுண்டரி அடித்து 39 பந்துகளில் அரைசதம் கண்டார் கிளென் பிலிப்ஸ். அந்த ஓவரிலேயே 18 ரன்களைக் கொடுத்தார் கருணரத்னே. 15வது ஓவரில் டேரில் மிட்செல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 15வது ஓவர் முடிவில் நியூஸிலாந்து 102/4 என்று இருந்தது. கிளென் பிலிப்ஸ் 46 பந்துகளில் 65 என்று இருந்தார். கடைசி 5 ஓவர்களில் 65 ரன்களை நியூஸிலாந்து விளாசியது.
கிளென் பிலிப்ஸ் விடப்பட்ட கேட்ச்களை வாய்ப்பாக மாற்றி கொண்டு 61 பந்துகளில் சதம் கண்டு 64 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து லாஹிரு குமாராவின் பந்தில் கேட்ச் ஆனார். நல்ல வேளை இவர் இன்னும் 3 பந்துகள் நின்றிருந்தால் இன்னும் 2 சிக்சர்களை அடித்திருந்தால் நியூஸிலாந்து ஸ்கோர் 179-180 ரன்களைத் தொட்டிருக்கும்.
கடைசியில் ரன்களை வாரி வழங்கியதில் தீக்ஷனா குறிப்பிடத்தகுந்தவர், இவர் முதல் 2 ஓவர்களில் 7 ரன்களை கொடுத்து கடைசி 2 ஓவர்களில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களைக் கொடுத்தார். தனஞ்ஜயா 2 ஓவர் 14 ரன்கள்தான் ஏன் அவருக்கு 4 ஓவர் கொடுக்கப்படவில்லை என்பது விமர்சனத்துக்குரியதாகும். வனிந்து ஹசரங்கா 4 ஓவர் 22 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். உயரமான பவுலர் ரஜிதா அட்டகாசமாக வீசி 23 ரன்களுக்கு 2 விக்கெட். கடைசியில் ரன்கள் கொடுத்ததில் லாஹிரு குமாரா 3 ஓவர் 37 ரன்கள், சமிகா 3 ஓவர் 34 ரன்களை வாரி வழங்கினர்.
மொத்தத்தில் இலங்கை கிளென் பிலிப்சுக்கு விட்ட 2 கேட்ச்களாலும், நிறைய மிஸ்பீல்ட்களாலும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதாலும் அனைத்திற்கும் மேலாக பேட்டிங்கில் எந்த வித முதுகெலும்பும் இல்லாமல் அலட்சியமாக ஆடி விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்குக் காரணம். ஆட்ட நாயகன் கிளென் பிலிப்ஸ்.