இடஒதுக்கீட்டால் பலன்பெற்று வருபவர்களுக்கு பாதிப்பு இல்லாமல்தானே, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது; இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற வாதம் தந்திரமானது” என்கிறார் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்…
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த புதிய அணி தமிழகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறது?
அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி அவர் தொடர் பிரச்சாரங்களை, நடைபயணங்களை, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது பாமக 2.0. பாமக மீது பொதுவாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அது திட்டமிட்டு நிகழ்கிறதா அல்லது பொதுமக்களின் பார்வையில் அப்படி தெரிகிறதா என்ற கேள்வி இருக்கிறது. இதனால், நாங்கள் ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், எங்களை சிறு வளையத்திற்குள் வைத்தே பார்க்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்.”
“பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு சாதிக் கட்சி என்பதாக பார்க்கப்படுவதைத்தானே சொல்கிறீர்களா?”
“தேவைப்படும்போது அப்படி சொல்வார்கள். அன்புமணி ராமதாஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் தமிழ்நாட்டிற்கான அடிப்படைத் தேவைகள் குறித்து பேசுகிறார். ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிக்க வேண்டும் என்பதாக இல்லாமல், ஆரோக்கியமான, பொறுப்புள்ள ஒரு எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பாமக ஒரு முற்போக்கான கட்சி. அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 200 பேர் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களிடம் இருந்து நியமனக் கடிதத்தைப் பெற்று வருகிறார்கள். நாள்தோறும் திருவிழா போன்று மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இல்லத்தில் இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்டம்தோறும் சென்று அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அன்புமணி ராமதாசின் செயல்பாடு இருந்து வருகிறது. விரைவில் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.”
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாமக எத்தகைய திட்டத்தோடு இருக்கிறது? கூட்டணியில் இணைந்து எதிர்கொள்ளப் போகிறதா? தனித்தா? கூட்டணி என்றால் யாரோடு?
தேர்தல் வியூகம் என்ன, எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு முடிவு செய்யும். நீண்ட நெடிய விவாதத்திற்குப் பிறகுதான் நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம். தற்போது கட்சியை பலப்படுத்தும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பார்கள்.”
திமுகவின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியை பாமக எப்படிப் பார்க்கிறது?
தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றிவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். என்றாலும்கூட, பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அரசுப் பணி நியமனங்கள், பழைய ஓய்வூதியத் திட்டம், மாதம்தோறும் மின்கட்டண வசூல் போன்ற வாக்குறுதிகளை அவர்கள் விரைவாக நிறைவேற்ற வேண்டும். அதேநேரத்தில் பெண்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 கொடுப்பது உள்பட பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. அதற்காக நாங்கள் திமுக அரசை பாராட்டுகிறோம்.”
பருவமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை என பல மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விஷயத்தில் பாமக அரசுக்கு என்ன கோரிக்கை விடுக்க விரும்புகிறது?
பருவமழைக் காலங்களில் ஏராளமான நீர் வீணாக கடலில் கலக்கிறது. மழைநீர் சேமிப்பு, நீர் மேலாண்மை குறித்து நாங்கள் தொடர்ந்து அரசுக்கு ஆலோசனைகளை சொல்லி வருகிறோம். மழை பாதிப்புகளை தவிர்க்க முடியாது என்று சொன்னாலும்கூட, அதனை குறைக்க முடியும். இதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல், 1967-க்குப் பிறகு தமிழகத்தில் பெரும் நீர்ப்பாசன திட்டங்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பாசனத் திட்டங்கள் அத்தனையுமே காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவைதான். மத்தியப் பிரதேசம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, நீர் ஆதாரத்தைப் பெருக்க நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பாமக வலியுறுத்துகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை பாமக எதிர்ப்பதற்கான காரணம் என்ன?
இது சமூக நீதிக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம். சமூக நீதிக்கான கோட்பாடுகள், விதிகள், கொள்கைகள் ஆகியவற்றை பின்பற்றி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் புது வியூகத்தில் கையாண்டிருக்கிறது. இது அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது. சரத்து 15(4), 16(4) ஆகியவை முதல் அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டவை. நீண்ட நெடுங்காலமாக சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கி இருப்பதாலும், அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததாலும் SC, ST, OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த அரசியல் சாசன திருத்தம் வழிகோலியது.
இந்த இடத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காகவோ, பழங்குடியினர் என்பதற்காகவோ, பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதற்காகவோ அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் காலம் காலமாக பின்தங்கியவர்கள் என்பதற்காகவே அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வியும், சமூக நிலையுமே இட ஒதுக்கீட்டுக்கு ஆதாரமாக உள்ளது; பொருளாதாரம் அல்ல.
அதுமட்டுமல்ல, சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் 51 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என மண்டல் அறிக்கை கூறியது. எனினும், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் காரணமாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த 27 சதவீத இடஒதுக்கீடும்கூட நடைமுறையில் முழுமையாக வழங்கப்படுவதில்லை.
ஆனால், தற்போது வழங்கப்பட்டிருப்பது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு. இது அரசியல் சாசனத்தில் சொல்லப்படாதது. நலிவுற்றவர்களை மேலே உயர்த்த ஒரு அரசு நடவடிக்கை எடுப்பது என்பது வேறு; இட ஒதுக்கீடு வழங்குவது என்பது வேறு. 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பாக நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதில் முன்னேறியவர்கள் எத்தனை சதவீதம் என்பதை கண்டறிந்து, அவர்களில் பின்தங்கியவர்கள் எத்தனை சதவீதம் என்பதை உறுதி செய்து அதன் பிறகே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருவாய் ஈட்டக் கூடியவர்களை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இந்த வழக்கை 11 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று ஒரு வழக்கறிஞராக நான் வலியுறுத்துகிறேன்.