மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஷரீக் குறித்து விசாரிப்பதற்காக கோவை வந்துள்ள மங்களூரு தனிப்படை போலீஸார் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கோவையில் தங்கியிருந்த ஷரீக்கிற்கு தொடர்புள்ளதாக தெரியவந்தது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள விடுதியில், போலி ஆதார் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ஷரீக் செப்டம்பர் மாதம் 3 நாட்கள் தங்கியிருந்துள்ளார். கோவையில் தங்கியிருந்த நாட்களில் அவர் சென்று வந்த இடங்கள், தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் மங்களூரு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், அவரது வாட்ஸ் அப் பக்க குழுவின் முகப்பில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் புகைப்படத்தை வைத்திருந்தது தெரியவந்தது. இந்த வாட்ஸ் அப் குழு நவம்பர் 18-ம் தேதி வரை செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த புகைப்படத்தை வைத்திருந்ததற்கான காரணங்கள் என்ன, அவர் அங்கு சென்று வந்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விசாரணையில், ஷரீக் பிரேம் ராஜ் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்ததும், தொலைபேசி அழைப்புகளின் வழியாக பேசாமல், வாட்ஸ் அப் கால்கள் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வேறு யாராவது தங்கியுள்ளனரா, என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ஷரீக் தங்கியிருந்த விடுதிக்கு நேற்றே சீல் வைத்துவிட்ட நிலையில், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஷரீக்கின் நடமாட்டம் , அவரை சந்தித்த நபர்கள் குறித்து கோவை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்த தகவல்களை என்ஐஏ அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறவும் தனிப்படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.