சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, ”தமிழகத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்க வசதியாக 69 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளேன்.
வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் ஐடிஐ 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 12 தொழிற்பிரிவுகள் உள்ளன. புதிதாக இரண்டு தொழிற் பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலை தரத்துக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.2,200 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் டெண்டர் பணி முறைகேடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பொதுமக்கள் பாராட்டும் அளவுக்கு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை பொறுக்க முடியாமல் அவர் பழைய பல்லவியை பாடியுள்ளார். கரூர் டிவிஷனில் பணி முடியும் முன்பே அதற்கான தொகை முழுவதும் ஒப்பந்ததாரருக்கு அளிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது. இதுகுறித்து நான் உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்தேன்.
ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் அளித்த பதிலில் தான் கேட்காமலே பணத்தை அதிகாரி வங்கி கணக்கிற்கு அனுப்பினால் நான் பொறுப்பேற்க முடியாது என்றார். அவர் அந்த பணியை முடித்த பிறகு அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்ததில் தரமாக இருந்தது. இதில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை பொறியாளர் கோதண்டம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் அறிக்கையின் பேரில் துறை ரீதியாக அதிகாரி மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க மத்திய அரசுக்கு திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கும் நிலையில் இருப்பதால் ஜனவரி மாதத்தில் டெண்டர் கோர வாய்ப்புள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஆனால், மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி குறைவாக இருக்கிறது. திருப்பத்தூர் ஆலைக்கே கரும்பு போதாத காரணத்தால் கள்ளக்குறிச்சியில் இருந்து கரும்பை அனுப்ப வேண்டியுள்ளது. ஆம்பூர் சர்க்கரை ஆலையை இயக்க அரசுக்கும் விருப்பமாக இருந்தாலும் போதுமான அளவுக்கு கரும்பு இல்லை.
தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை புதிதாக கட்டுவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி வரை தேவைப்படுகிறது. இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் பணிகள் நடைபெறும்.
தமிழகத்தில் தேவையில்லாத சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பம்தான். அதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வருகிறோம். பெங்களூருவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்திலும் அதை வலியுறுத்தினேன்.
60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்க முறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து நாங்கள் ஆய்வு நடத்தி அறிக்கையும் அளித்துள்ளோம். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் மூலம் கடிதமும் எழுதப்பட்டது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த பதிலில் சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். வேலூர் சுற்றுச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனை திமுக ஆட்சியில் விரைவுப்படுத்தி உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.