சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விபயில்வதற்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்களையும் பள்ளிகள் மூலமாகவே பெற்று தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு; ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஒருபகுதியாக அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் மற்றும் அவைதொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு மாணவர்களின் விவரங்கள் அதில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, அந்த தளத்தில் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் உட்பட பல்வேறு விவரங்கள் குறித்த தகவல்களும் கிடைக்கும். மேலும், ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டு அதன்மூலம் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, இந்த இணையதளத்தில் பதிவு செய்த பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கு செல்ல தேவையான அனைத்து சான்றிதழ்களையும் அந்தந்த துறைகளிடம் இருந்து பள்ளிகளே பெற்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் பள்ளிகளுக்கு தற்போதுவழங்கப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களை அருகிலுள்ள கல்லூரிகளுக்கு செல்லவும் உத்தரவிட்டுள்ளோம்.