தாய்லாந்து நாட்டுக்கு சென்று யானைகள் பராமரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி பெற்று திரும்பிய வண்டலூர் உயிரியல் பூங்கா பணியாளர்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வரவேற்று கவுரவித்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 13 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் தாய்லாந்து யானைகள் காப்பக மையத்தில் யானைகள் வளர்ப்பு மற்றும் காப்பக பராமரிப்பு பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி பெற்றனர். அவர்கள் பயிற்சி முடிந்து நேற்று சென்னை வந்தனர். அவர்களை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வரவேற்று, பாராட்டி பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
6 நாட்கள் பயிற்சி: தாய்லாந்து நாட்டில் லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து யானைகள் காப்பகம் மையத்தில் 7 யானை பாகன்கள், 6 காவடிகள் என 13 பேர், ரூ. 50 லட்சம் அரசு செலவில் 6 நாட்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளனர்.
இவர்களுக்கு இப்பயிற்சியில் யானைகளை அறிவியல் ரீதியாக எவ்வாறு கையாள்வது, அதற்கு பயிற்சி அளிப்பது, அவைகளை எவ்வாறு குளிக்க வைப்பது, யானைகளுக்கான சத்தான உணவுகளை தயாரிப்பது, நோயுற்ற யானைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது, மதம் பிடித்தயானைகளை எவ்வாறு கட்டுபடுத்துவது, குட்டி யானைகளை பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தற்போது வனத்துறையில் மொத்த யானை பாகன்கள் 109 பேர் உள்ளனர். தாய்லாந்தில் சிறப்புபயிற்சி பெற்ற யானை பாகன்கள் மூலம் மற்ற பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை மற்றும் ஆனைமலை முகாம்களில் உள்ள யானைகளை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, முதுமலை புலிகள் காப்பகஇயக்குநர் வெங்கடேசன், வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குநர் ஈ.பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.