“தமிழகத்தில் பாஜக அதிகமான புதிய நபர்களால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜகவில் இருந்து சிலர் விலகி வேறு கட்சிகளில் இணைவதால் எங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைவதும், மாற்றுக் கட்சிகளில் இருந்து எங்களுடைய கட்சிகளுக்கு வருவதும், கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிரதான கட்சிகளில் இருந்து எங்களுடைய கட்சிக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
சமீபத்தில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரவு தலைவர் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு கட்சியிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் காரணங்கள் இருக்கலாம். அரசியல் ரீதியாக என்னவாக வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு விருப்பம் இருந்திருக்கலாம். இதுபோல, ஒவ்வொரு நபர்களும் கட்சியிலிருந்து வெளியே செல்லும்போது, கட்சி தலைமை குறித்து, தாங்கள் கூறுவது சரியானதா, தவறானதா என்று தெரியாமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதை சொல்லி வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை.
எங்களுடைய கட்சிய அதிகமான புதிய நபர்களால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜகவில் இருந்து சிலர் விலகி ஒருசிலர் வேறு கட்சிகளில் இணைவதால் எங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், அறிவுசார் பிரிவு முன்னாள் செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட பலர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.