அசாம் மாநிலம், நாகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி யானைக் கூட்டத்தில் இருந்த 18 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஆனால், வியாழக்கிழமை (நேற்று) பிற்பகலில்தான் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்து அவர்கள் சென்று யானைகளைப் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து கதியாடோலி வனச்சரகத்தின் தலைமை வனக்காப்பாளர் அமித் ஷாகே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
”அசாமின் எல்லைப் பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங் எல்லையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு அந்தப் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது மின்னல் தாக்கி 18 யானைகள் கொண்ட யானைக்கூட்டம் உயிரிழந்தன. எங்களுக்கு இன்று (நேற்று) காலைதான் தகவல் கிடைத்து, அங்கு வனத்துறையினர் சென்றுள்ளனர்.
இரு கூட்டங்களாக யானைகள் உயிரிழந்துள்ளன. 14 யானைகள் வனப்பகுதியின் மேல் பகுதியிலும், 4 யானைகள் கீழ்ப்பகுதியிலும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன. முதல்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கி அதிலிருந்து வந்த அதிக மின்னழுத்தம் மூலம் யானைகள் இறந்துள்ளன. ஆனால், யானைகளை உடற்கூறு ஆய்வுசெய்த பின்புதான் உண்மையான காரணம் தெரியவரும்.
இரு மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரிகள், வனப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த விவகாரத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை முதல் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்துவார்கள்.
பொதுவாக மழைக் காலத்தில் யானைகள் பெரிய மரங்களின் கீழே கூட்டமாக நின்றுகொள்ளும். அவ்வாறு நின்றிருந்தபோது, அந்த மரத்தில் மின்னல் தாக்கியிருக்கலாம். மின்னல் அதிக சக்தியுடன் தாக்கும்போது, கூட்டமாக யானைகள் இறக்க வாய்ப்புள்ளது. உயிரிழந்த யானைகளில் எத்தனை ஆண் யானைகள், பெண் யானைகள், கர்ப்பமாக இருக்கும் யானை உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் தகவல் கிடைக்க சிறிது காலமாகும்” எனத் தெரிவித்தார்
யானைகள் மின்னல் தாக்கி இறந்த பகுதியில் வசிக்கும் கிராமத்து மக்கள் கூறுகையில், “புதன்கிழமை இரவு முதல் யானைகள் தொடர்ந்து பிளிறிக்கொண்டே இருந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் நாங்கள் செல்லவில்லை. மழை நின்றபின் காலையில் சென்று பார்த்தபோதுதான் யானைகள் கூட்டமாக இறந்தது தெரியவந்தது” எனத் தெரிவித்தனர்.
யானைகள் நல ஆர்வலர் பிபூடி லாங்கர் கூறுகையில், “இந்தியாவில் இதுபோன்று யானைகள் கூட்டமாக மின்னல் தாக்கி இறப்பது அரிதான நிகழ்வு. அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் இதுதான் முதல் முறை. ஆப்பிரிக்க வனப்பகுதியில் இதுபோன்று மின்னல் தாக்கி யானைகள் இறப்பது நடக்கும்.
ஆனால், இந்தியாவில் அரிதான நிகழ்வு. இந்தியாவின் கிழக்குப் பகுதி வனப்பகுதியில் மே.வங்கத்தில் உள்ள ஜல்தாபாராவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இதுபோன்று கூட்டமாக இறக்கவில்லை. யானைகளை உடற்கூறு ஆய்வு செய்யாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது” எனத் தெரிவித்தார்.