இங்கிலாந்து பயணத்துக்கு இந்திய அணியினர் செல்லும்போது அவர்களின் குடும்பத்தாரையும் உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல இந்திய மகளிர் அணியினர், இரு அணிகளின் உதவியாளர்கள், பயிற்சியாளர் என அனைவரும் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இங்கிலாந்தில் வரும் 18-ம் தேதி நியூஸிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடியபின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது. 2 மாதத்துக்கு மேல் நீடிக்கும் பயணம் என்பதால், கரோனா காலத்தில் குடும்பத்தினரைப் பிரிந்திருப்பது வீர்ரகளை மனரீதியாக பாதிக்கும் என்பதால், குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் வரும் 18-ம் தேதி சவுத்தாம்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைக் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரும் வரமாட்டார்கள் எனத் தெரிகிறது. சவுத்தாம்டன் மைதானத்துக்குள் வருவதற்கு 10 நாட்கள் கடினமான தனிமையைப் பின்பற்றிய பின்புதான் வரமுடியும் என்பதால், போட்டியைக் காண அவர்கள் இருவரும் செல்லமாட்டார்கள்.
இதுகுறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வீரர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இங்கிலாந்து பயணத்துக்குச் செல்லும் இந்திய வீரர்கள், மகளிர் அணி, இரு அணிகளின் உதவியாளர்கள் அனைவரும் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதித்துள்ளது. வீரர்களின் மனநிலை மிகவும் முக்கியம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைக் காண சவுரவ் கங்குலி, ஜெய் ஷா இருவருக்கும் இங்கிலாந்து வாரியம் எளிதாக அனுமதி வழங்காது. அவர்கள் இருவரும் 10 நாட்கள் கடினமான தனிமையில் இருந்தபின்புதான் போட்டியைக் காண முடியும். ஆதலால், இருவரும் வருவதற்கு வாய்ப்பு குறைவு.
பிசிசிஐ தலைவருக்கும், செயலாளருக்கும் ஒரே விதி என்பதால், அவர்கள் வரமாட்டார்கள் எனத் தெரிகிறது.
இந்திய வீரர்கள், மகளிர் அணி லண்டன் சென்றபின் அங்கிருந்து சவுத்தாம்டன் நகரில் ஹோட்டல் ஹில்டனில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மகளிர் அணி தனிமைக்காலம் முடிந்தபின் பிர்ஸ்டல் நகருக்குச் செல்லும். இந்திய வீர்கள் பலகட்ட பிசிஆர் பரிசோதனைக்குப் பின் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். லண்டன் புறப்படும் முன்பாக இந்திய வீரர்களுக்கு 6 பிசிஆர் பிரிசோதனைகள் செய்யப்பட்டு அதில் அனைத்துமே நெகட்டிவ் இருக்க வேண்டும். சவுத்தாம்டன் நகரம் சென்றபின் 3 நாட்கள் அறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் உடற்பயிற்சிக்கும் வலைப்பயிற்சிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.