தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 03) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கெனவே உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகளுடன், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாக்கோட்டை க. அன்பழகன், துரை. சந்திரசேகரன், என்.அசோக்குமார், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் ஆகியோரும், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.