வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான மத்திய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும், என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் இன்று ஆற்றிய உரை:

“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 16-வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் இங்கு கூடியிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களாட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்த மாமன்றத்தில் வீற்றிருக்கும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் எதிர்பார்க்கப்படும் கடமைகளை, நீங்கள் ஒவ்வொருவரும் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இறையாண்மையும், சமத்துவச் சமுதாயமும், மதச்சார்பின்மையும் கொண்ட மக்களாட்சியின் மாண்பு அமையப்பெற்ற குடியரசாக இந்தியா மலர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவால், இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்றுள்ள மகத்தான வெற்றி இந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டு.

சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அரசின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு முயற்சியும் மேற்கூறிய கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் இந்த அரசின் நெறிமுறைக்கு ஏற்ப, தொடர்புடையோர் அனைவரையும், அனைத்துத் தரப்பு மக்களையும், சட்டமன்றப் பேரவையிலுள்ள அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து, கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வது குறித்து இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும்.

மக்களாட்சியின் மாண்பின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், ஓர் உண்மையான குடியரசின் உயிர்நாடியாக விளங்கும் நமது மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த அரசு உறுதியாக உள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, மத்திய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்.

இந்த அரசு பதவியேற்றபின் முதல்வர் ஸ்டாலின் புதுடெல்லி சென்று, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகள், தமிழக அரசின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் முக்கிய திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி, மத்திய அரசின் உதவியைக் கோரும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரை நேரில் சந்தித்து அளித்தார். இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்ந்து, தமிழக அரசிற்குத் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம்”.

இவ்வாறு அந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.