விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை முடிப்போம் என நம்புவதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
அரங்குகள் அமைத்துப் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் வெளிப்புறங்களில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முழுமையாகக் குறைந்தவுடன்தான் படப்பிடிப்பு தொடங்கும்.
இதனிடையே, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு குறித்து மணிரத்னம் முதன்முறையாகப் பேசியுள்ளார்.
‘நவரசா’ ஆந்தாலஜி குறித்து மணிரத்னம் அளித்துள்ள பேட்டியில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த கேள்விக்கு பதில் கூறியிருப்பதாவது:
“இந்தக் காலகட்டத்தில் படப்பிடிப்பு நடத்துவது மிகக் கடினம். ஏனென்றால் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும். இன்னும் ஒருகட்டப் படப்பிடிப்பு முடியவில்லை. விரைவில் முடிப்போம் என்று நம்புகிறேன். எனது முந்தைய படங்களை விட ‘பொன்னியின் செல்வன்’ பிரம்மாண்டமானது. ஆனால் பெரிய படமோ, சிறிய படமோ, இரண்டுமே எடுப்பது கடினம்தான்.”
இவ்வாறு மணிரத்னம் தெரிவித்துள்ளார்.