நீட் தேர்வு பாதிப்புகளை ஆராயும் குழுவை எதிர்த்த வழக்கில் தன்னையும் இணைக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி ஆகியோரும் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி மூலமாக கொளத்தூர் மணி தாக்கல் செய்துள்ள மனுவில், “மக்கள் நலன் சார்ந்த அரசுக்கும், மக்களுக்கும் இடையே தூதுவர் என்ற அடிப்படையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுவிடம் நீட் தேர்வின் சாதக, பாதகங்கள் குறித்து அனைத்துத் தரப்பிலும் மனுக்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்து தற்கொலைக்கு ஆளாகியுள்ள சம்பவங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். மனுதாரர் கரு.நாகராஜன் கூறுவதுபோல சட்டத்தை மீறி குழு அமைக்கப்படவில்லை” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு ஜூலை 13ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.