நாட்டின் 60 சதவீத மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை, அந்த மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டன, ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் முன்கூட்டியே நேற்று முடிக்கப்பட்டது. பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி கடந்த 17 அமர்வுகளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியிலும், கூச்சலிலும் ஈடுபட்டன.
மாநிலங்களவையில் நேற்று மசோதாக்களை நிறைவேற்றும்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் மீது பலப்பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று புகார் அளித்தனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், திமுக எம்.பி. திருச்சி சிவா, மனோஜ் ஜா உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் சென்றனர்.
ஜனநாயகத்தைக் கொலை செய்வதை நிறுத்துங்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி எம்.பி.க்கள் சென்றனர்.
அப்போது காங்கிஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. 60 சதவீத மக்களுக்கு கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. அதாவது 60 சதவீத மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன, அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள். மாநிலங்களவையில் நேற்று எம்.பி.க்கள் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் பேசுவதற்குகூட அனுமதிக்கப்படவில்லை. இது ஜனநாயகப் படுகொலையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை பற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பியும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மிகப்பெரிய தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்களிடம் இந்த நாட்டைப் பிரதமர் மோடி விற்று வருகிறார். முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். வெளியே இழுத்து வரப்பட்டுள்ளார்கள். இந்த அவையை நடத்த வேண்டிய பொறுப்பு அவைத் தலைவருக்கு உண்டு” எனத் தெரிவித்தார்.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் பேச அனுமதிக்கப்படவில்லை. எந்த முக்கியமான விவகாரங்களும் எழுப்பப்படவில்லை. மாநிலங்களவைப் பாதுகாவலர்கள் நடந்துகொண்ட முறையும், எம்.பி.க்களை இழுத்துவந்த முறையும், நான் பாகிஸ்தான் எல்லையில் இருந்தது போன்றும் என்னை அனுமதிக்க மறுத்தது போன்றும் இருந்தது” எனத் தெரிவித்தார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் இதுபோன்று மோசமான முறையில் நடந்துகொண்டதை நான் பார்த்தது இல்லை” எனத் தெரிவித்தார்.
பிரபுல் படேல் கூறுகையில், “எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவார் இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்ததில், இதுபோன்று வெட்கட்கேடான சம்பவங்களைத் தனது அரசியல் வாழ்க்கையில் பார்த்தது இல்லை என வேதனை தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டார்.
ஆனால், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “எதிர்க்கட்சிகள் கூறுவது அனைத்தும் முற்றிலும் தவறானவை. பாதுகாவலர்கள் எம்.பி.க்களைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டு, கண்காணிப்பு கேமராவில் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.