அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விழாவொன்றில் கலந்து கொண்டார்.
அதில் தொகுப்பாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். அதில், “‘குட் பேட் அக்லி’ படத்துக்கு முன், பின் என வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை அஜித் சார் கொண்டு வந்திருக்கிறார். அந்த மாற்றத்தை திரையில் எடுத்து வருவதற்கு முயற்சித்திருக்கிறேன்.
அவருக்கு போஸ்டர்கள், பேனர்கள் என வைத்தவன் நான். எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு இது. சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவருடன் பணிபுரிந்த 100 நாட்களும் எனக்கு அப்படித்தான். ஒவ்வொரு நாளும் எனக்கு முதல் நாள் முதல் காட்சி அவரது படம் பார்க்கும் அனுபவம்தான்.
அவருடன் பணிபுரிந்தது என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணம். அவர் தூய்மையான இதயம் கொண்டவர். யாரைப் பற்றியும் எங்கேயும் தவறாக பேச மாட்டார். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடம் தான் கற்றுக் கொண்டேன்.
‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு தளத்தில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அன்றிலிருந்து எனது படங்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்தையுமே அவர் மாற்றிவிட்டார். அங்கிருந்து மாறி தான் ‘மார்க் ஆண்டனி’ என்ற படம் பண்ணினேன். அந்தப் படமும் உருவாக காரணமானவர் அவர்தான்.
‘குட் பேட் அக்லி’ கதாபாத்திரம் என்ன கேட்கிறதோ அதை 100% கொடுப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். ஒரு பொழுதுபோக்கு படத்தினை கொடுக்க ஒட்டுமொத்த குழுவே முயற்சித்திருக்கிறோம். அவர் அனைத்து கதாபாத்திரங்களுமே செய்துவிட்டார். புதிதாக ஒன்றும் செய்யவில்லை.
‘குட் பேட் அக்லி’ ஒரு மாஸான பொழுதுபோக்கு படமாக இருந்தாலும், அதில் எமோஷன் காட்சிகளும் இருக்கிறது. எமோஷன் இல்லாத மாஸ் காட்சிகள் சரியாக இருக்காது. ஒவ்வொரு காட்சியுமே மக்கள் ரசிக்கும் வகையில் படமாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.