ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவ்வமைப்பை சேர்ந்த முன்னணி தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் அந்நாட்டின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கனின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கத்தாரிலிருந்து ஆப்கனுக்கு வருகை தந்திருக்கிறார் முல்லா அப்துல் கனி.
தலிபான்கள் அமைப்பின் துணை தலைவராக முல்லா அப்துல் கனி பரதர் உள்ளார். கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ -யுடனான சந்திப்பை தலைமை ஏற்று நடத்தியர் முல்லா அப்துல் கனி.
யார் இந்த முல்லா அப்துல் கனி பரதர்?
ஆப்கன் உருஸ்கன் மாகாணத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்த முல்லா அப்துல் கனி பரதர். ஆப்கனில் சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர்.
சோவியத் யூனியன் வெளியேற்றத்துக்குப் பிறகு, 1994 ஆம் ஆண்டு முகமத் ஒமருடன் இணைந்து தலிபான் இயக்கத்தை ஆரம்பித்தவர்.
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற அமெரிக்க அரசுடனான அமைதி பேச்சு வார்த்தையில் முதன்மை பங்கு வகித்தவர் இவர்.