சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, பயணிகள் சென்று வர வசதியாக மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வார நாட்களில் (திங்கள் – சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் நீட்டித்து இயக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில் நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில்கள் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடியாக ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, முகக்கவசம் அணியாமல் வந்த 176 பயணிகளிடமிருந்து ரூ.35,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மெட்ரோ ரயில்களில் பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.