வீதி, வீதியாக தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் மீண்டும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும், தவெக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் தவெக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. எனினும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் இல்லாமல் இருக்கிறது.
அப்படிப்பட்ட இடங்களை நிர்வாகிகள் ஆய்வு செய்து கண்டறிந்து, 234 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதி, வீதியாகவும் தண்ணீர் பந்தல்களை கட்சி சார்பாக அமைக்க வேண்டும் என விஜய் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். இத்துடன் தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதையும் நிர்வாகிகள் உறுதி செய்யவேண்டும்.