நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அட்லி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படம், புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் மகாபாரத கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி அளித்துள்ள பேட்டியில், “அல்லு அர்ஜுன் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நாங்கள் தயாரிக்கும் படம், புராணக் கதையை கொண்டது. இந்தியாவே ஆச்சரியப்படும் விதமாக அந்தப் படம் இருக்கும். ஆனால் அது ராமாயணமோ, மகாபாரதமோ அல்ல. அதிகம் கேள்விப்படாத புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு படத்தைத் தயாரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், முருகப்பெருமானாக நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த, ‘ஜுலாயி’, ‘சன் ஆஃப் சத்தியமூர்த்தி’, ‘அலா வைகுந்த புரம்லோ’ படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.